பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து மக்களைத் திண்டாட வைத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களும், கட்டுமானப் பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் தான் சைக்கிள்களின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 5 கி.மீ. தூரத்திற்குள் சைக்கிள்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் கிராம மக்கள். அதனால் சைக்கிள் விலையும் உயர்ந்துவிட்டதால் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக வீட்டில் மூலையில் போடப்பட்ட பழுதான சைக்கிள்களைப் பழுது நீக்கி ஓட்டத் தொடங்கியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகி்ல் உள்ள கொத்தமங்கலத்தில் ஒரு சைக்கிள் கடையில் ஏராளமான பழைய சைக்கிள்கள் பழுது நீக்க வரிசையில் கிடந்தது. இது பற்றி சைக்கிள் பழுது நீக்கும் மணிவாசகம் கூறும் போது, "நான் கடந்த 40 வருடங்களாக சைக்கிள் வாடகை கம்பெனி வைத்து பழுது நீக்கியும் வந்தேன். 10, 15 வருடங்களாக மோட்டார் சைக்கிள்கள் அதிகரித்து சைக்கிள் தொழில் நலிவடைந்து ரொம்பவே பாதிக்கப்பட்டோம். அதனால் மாற்றுத் தொழிலாக பெட்டிக்கடை வைத்திருந்தேன்.
தற்போது பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து ரூபாய் 102- க்கு மேல் அதிகரித்துவிட்டதால் கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் சைக்கிள்களைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதால் புதிய சைக்கிள் விலையும் உயர்ந்துவிட்டது. அதனால் பல வருடமாக வீட்டில் மூலையில் நிறுத்தி வைத்திருந்த பழைய சைக்கிள்களைப் பழுது பார்க்க எங்களிடம் வருகிறார்கள். அதனால் எங்களுக்கு மீண்டும் வேலை கிடைத்திருக்கிறது. பெட்ரோல் விலை உயர்வால் என்னுடைய பழைய தொழில் எனக்கு கை கொடுக்கிறது" என்றார்.