
மதுரை மாவட்டம் கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளி ஒன்றில், படித்து வந்த ஆரூத்ரா என்ற 3 வயது பெண் குழந்தை இன்று விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளிக்குப் பின்புறம் உள்ள 15 அடி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை ஆரூத்ரா சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக உயிருக்குப் போராடிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு குழந்தையைத் தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டனர். அதனைத் தொடர்ந்து குழந்தை ஆருத்ரா, சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஆருத்ரா, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், பள்ளி உரிமையாளர் திவ்யாவை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பள்ளியில் வேலை பார்த்து வந்த 6 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி உதவியாளர் என 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளியில் குழந்தை ஒன்று நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், காவல் ஆணையர் அனிதா மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ஷாலின் உள்ளிட்டோர், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு சீல் வைத்தனர்.