
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த 1 மாத காலமாக நடைபெற்றது. அந்த வகையில், இன்று (29-04-25) 2025-26ஆம் ஆண்டிற்கான காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவலர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் மற்றும் அவருடைய கட்சித் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் ஆகியோர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி நேரிலும் கடிதத்திலும் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அந்த அடிப்படையில், ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டில் அரசு பணியாளர் தேர்வு முறையில் தயாரிக்கப்பட்டு வந்த தலைவரிசை பட்டியலானது சமூகநீதி அடிப்படையில் இருந்து வந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு வரப்பெற்ற ஒர் உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இந்த முறையில் ஏற்பட்டுள்ள மற்றும் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கும் அதற்கான சட்டரீதியான தீர்வுகள் அளித்திடவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்றத்தி நீதியரச தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படும். அந்த குழு அளிக்கக்கூடிய பரிந்துரையின் அடிப்படையில் இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் இருந்து ஒரு நல்ல தீர்வு காணப்படும்.
மேலும், இன்னொரு முக்கிய அறிவிப்பு செய்ய விரும்புகிறேன். இந்த மண்ணின் ஆதி குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசை சொல்லாகவும் மாறி இருப்பதால் இனி இந்த சொல் அரசு ஆவணங்களில் இருந்தும் பொது புழக்கத்தில் இருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.