டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் மது விற்பனையினால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்று பல்வேறு இயக்கங்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஏற்கனவே பள்ளி கல்லூரி வழிபாட்டுத்தலங்கள் அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை அரசு மூடி உள்ளது. மேலும் சில பகுதிகளில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மதுக்கடைகள் இருப்பதாகக் கூறி அவைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர் மதுப்பிரியர்கள்.
விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “தங்கள் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு கொண்டு இருந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூடிவிட்டனர். இதனால் நாங்கள் மது வாங்க பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. மேலும் அதிக விலை கொடுத்தும் கள்ளத்தனமாகவும் மதுபானங்களை வாங்கிக் குடிக்க வேண்டியுள்ளது. எனவே எங்கள் வசதிக்காக எங்கள் பகுதியில் ஏற்கனவே செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுபான கடையை மீண்டும் திறக்க வேண்டும்” என்று கூறி மனு அளித்துள்ளனர்.