ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே 54 வயதான நபர் ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு வந்துள்ளது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அந்நபர் ஜோதிடரை நாடியுள்ளார். ஜோதிடர், பாம்பு கனவில் வந்தால் அதற்கு தனியாக பரிகாரம் இருக்கிறதென்று கூறி பாம்பிற்கு பூஜை செய்ய சொல்லியுள்ளார். மேலும், பாம்புப்புற்று உள்ள கோவிலையும் சுட்டிக்காட்டி பூஜைகள் முடிந்த பின் பாம்பிற்கு முன் நாக்கை காட்டுங்கள் என்றும் கூறியுள்ளார்.
ஜோதிடர் சொன்னதைக் கேட்டு பூஜைகள் முடிந்த பின் பாம்புப்புற்று அருகே கண்ணாடிவிரியன் பாம்பிற்கு முன் நாக்கை நீட்டியுள்ளார். எதிர்பாராத விதமாக பாம்பு அந்நபரின் நாக்கில் கொத்தியது. இதனால் அந்த நபர் மயக்கமடைந்தார். அவருடன் சென்ற உறவினர் ஒருவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஈரோடு மணியம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செந்தில் குமார் கூறுகையில், “நோயாளி நவம்பர் 18 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த போது அவரது வாயில் ரத்தமாக இருந்தது. அவரது நாக்கு திசுக்கள் பாம்பின் விஷத்தினால் சேதமடைந்து இருந்தது. மேலும், விஷம் பரவாமல் இருப்பதற்காகவும் நோயாளியைக் காப்பாற்றவும் நாக்கை அகற்றியுள்ளோம். அதற்கு பிறகும் கூட நோயாளியின் உயிரைக் காப்பாற்ற நான்கு நாட்கள் போராடினோம்” என்றார்.
இதற்கு முன்பு கூட பாம்பிற்கு முத்தம் கொடுக்க முயன்ற நபரின் வாயில் பாம்பு கொத்தியது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. தற்போது மீண்டும் அதே போன்ற நிகழ்வு நடந்துள்ளதால் இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.