
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அடுத்த கொத்தமங்கலம் அருகே உள்ள இந்திரா நகரைச் சேர்ந்தவர் சின்ன ரங்கன் என்கிற சென்டான் (46). கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சென்டான் எப்போதும் அதே பகுதியில் தர்மன் என்பவர் தோட்டத்தில் பால் கறக்க செல்வது வழக்கம். அதேபோல் இன்று அதிகாலை 4.50 மணிக்கு இந்திரா நகரில் உள்ள தர்மன் என்பவரின் தோட்டத்திற்கு பால் கறக்க சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது புதரிலிருந்து வெளியே வந்த யானை ஒன்று திடீரென சென்டானை தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்காக சென்டான் போராடி கொண்டிருந்தார். சத்தம் கேட்டு அவரது மகள் வந்து பார்த்தார். அப்பொழுது தந்தை நிலையைக் கண்டு அருகில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரின் கார் மூலம் சென்டானை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.