Skip to main content

நடிகர் அஜித் உட்பட பல பிரபலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்... காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!! 

Published on 03/06/2021 | Edited on 03/06/2021

 

From Actor Ajith to more celebrities, a person make a bomb threaten..... Action taken by the police

 

சென்னையில் உள்ள தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி மூலம் பேசிய மர்ம நபர் சென்னையில் உள்ள நடிகர் அஜித்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது சற்று நேரத்தில் வெடித்துச் சிதறும் என்றும் கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை உடனே துண்டித்துவிட்டார். இதையடுத்து சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டுக்குப் போலீசார் விரைந்து சென்று  அவரது வீட்டில் எங்காவது வெடிகுண்டு அல்லது வெடிக்கும் தன்மைகொண்ட பொருள் ஏதாவது இருக்கிறதா என்று சல்லடை போட்டு சோதனை நடத்தினார்கள்.

 

அப்படி சோதனை நடத்தியதில் அஜித்குமார் வீட்டில் இருந்து எந்த வெடிபொருட்களும் சிக்கவில்லை. அதன்பிறகு தொலைபேசியில் வந்த தகவல் வெறும் புரளி என்பதைப் போலீசார் அறிந்தனர். இருந்தபோதிலும் அஜித் குமார் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அந்த மர்ம நபரின் ஃபோன் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சென்னை நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, மர்ம தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட செல்ஃபோன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்படி மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் (வயது 26) என்பது தெரியவந்தது. அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

From Actor Ajith to more celebrities, a person make a bomb threaten..... Action taken by the police

 

மேலும், இந்த புவனேஸ்வரன் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா இப்படி பல்வேறு பிரபலங்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக அவ்வப்போது மிரட்டல் விடுத்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது சம்பந்தமான வழக்கில் ஏற்கெனவே போலீசார் அவரை கைது செய்து, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் ஜாமீனில் விடுவித்துள்ளனர். அதன்பிறகும் தொடர்ந்து பிரபலங்களின் வீடுகளுக்கு அவ்வப்போது தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவருவது தொடர்ந்துகொண்டே இருந்ததால், இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஸ்வரனுக்கு 100 என்ற எண் மட்டுமே அவரது நினைவில் உள்ளது. அவரது கையில் யாருடைய செல்ஃபோனாவது கிடைத்துவிட்டால் போதும், உடனடியாக 100 என்ற தொலைபேசி எண்ணை நினைவில் வைத்துக்கொண்டு அந்த எண்ணுக்கு டயல் செய்து, இதுபோன்று பிரபலங்களின் பெயர்களைச் சொல்லி அவர்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டல் விடுக்கிறார். 

 

இவரை இனிமேல் அப்படியே விட்டுவைத்தால் பிரச்சினை மேலும் சிக்கலாகும். எனவே விரைவில் அவரை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கு உத்தரவிடுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி புவனேஸ்வரனை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளதாக விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் உள்ள பிரபலங்களுக்கு மனநலம் பாதித்த இளைஞர் புவனேஸ்வரன் அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவருவதும், இது தமிழக அளவில் பத்திரிக்கை, ஊடகங்களில் பரபரப்பாக வெளிவருவதும் தொடர் சம்பவங்களாக இருந்துவந்தது. இதனால் காவல்துறைக்குப் பெரும் சிக்கலையும் அவஸ்தையையும் ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்