வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “போராட்டக்காரர்களுக்கும் மன்னருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்திய காந்தியடிகள் தந்தை பெரியாரை உடன் அழைத்துச் சென்றார். கோவில் தெருவில் அனைவரும் நடக்கலாம் என்ற உரிமையைப் பெற்றுத் தந்த வெற்றி விழாவிற்கு தந்தை பெரியாரும் நாகம்மையாரும் அழைக்கப்பட்டார்கள்.
1929 ஆம் ஆண்டு போராட்டத்தை துவங்கிய அண்ணல் அம்பேத்கர் தனக்கு ஊக்கமளிக்கும் போராட்டமாக வைக்கம் போராட்டத்தையே குறிப்பிடுகிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டம் நடந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இன்று வரை வைக்கம் போராட்டம் சமூக நீதி வரலாற்றில் ஒலித்துக்கொண்டுள்ளது.
எளிய மக்களுக்காக எல்லைகளைக் கடந்து போராடி வரலாற்றில் இத்தகைய புரட்சிகளை நிகழ்த்தி வெற்றி கண்ட தந்தை பெரியாரின் நினைவைப் போற்றவும் சமூக நீதி கருத்துகளை தொடர்ந்து வலியுறுத்தவும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.