சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவிக்கு நடந்த நேர்காணலில் தேர்வு பெற்று, அரசு வழி ஆட்சிக் குழு உறுப்பினர்களால் ஆட்சி மன்றக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஒருவரை, பதிவாளர் பொறுப்பாக துணைவேந்தர் நியமித்திருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுதுள்ள பதிவாளர் பொறுப்பு நேற்று (31.12.2024) அன்று பல்வேறு தொகுப்பூதியப் பணியாளர்களை இடமாற்றம் செய்துள்ளது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு துறை ரீதியிலான விசாரணைக் குழுக்களை, ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு அமைத்துள்ள பதிவாளர் பொறுப்பு விஸ்வநாத மூர்த்தி, பதிவாளர் அலுவலக பிரிவு அலுவலர் விஸ்ணுமூர்த்தி மீது பட்டியலின ஆணையம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில் அவர் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதது பட்டியலின ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு இடத்தில் மூன்று ஆண்டுகளாக பணியில் இருந்தால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற மரபை மீறி விஷ்ணுமூர்த்தியை இடமாற்றம் செய்யாதது ஏன்? மேலும் விஸ்ணுமூர்த்திக்கு சட்டத்திற்கு முரணாக உதவிப் பதிவாளர் பதவி உயர்வு வழங்க முயற்சிகள் நடந்து வருகிறது. அவரது பணி நியமனமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் பதவி உயர்வு அளிக்க முற்படுவதை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரியார் பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் தங்கியுள்ள தனியார் கம்பெனி புரோக்கர் சசிக்குமாரை, விருந்தினர் இல்லத்தில் தங்குவதற்கு பதிவாளர் பொறுப்பு அனுமதித்ததை பேராசிரியர்கள் வன்மையாக கண்டித்திருந்தனர். அண்ணா பல்கலைக்கழகம் போல் இவரால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் இவரை உடனடியாக பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் முன்னாள் பதிவாளர் தங்கவேல் அவர்களால் தேர்வாணையர் அலுவலகத்திற்கு வாங்கப்பட்ட கணிணி மென்பொருள் செயலற்ற நிலையில் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன என்றும் கூறி இதன் மீது தமிழக அரசு விசாரணை செய்து விரைந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.