Skip to main content

பேரறிவாளன் உடல்நிலை மோசமடைந்தால்தான் பரோல் மனு பரிசீலிக்கப்படுமா? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
chennai high court

 

 

பேரறிவாளன் உடல்நிலை மோசமடைந்தால்தான் பரோல் மனு பரிசீலிக்கப்படுமா? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  கொலை வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட பன்னோக்கு விசாரணை முகமை செயல்பாட்டில் உள்ளதா? எனவும்  சென்னை உயர் நீதிமன்றம் சந்தேகம் எழுப்பியிருக்கிறது. 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன், கடந்த 28 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

 

இந்நிலையில், தனது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அந்த மனுவில், புழல் சிறையில் உள்ள 50 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நோய்களால் அவதிப்பட்டுவரும் பேரறிவாளனுக்கு கரோனா தொற்று பாதிக்கும் அபாயம் இருப்பதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

 

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ராஜீவ் கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க,  ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், பன்னோக்கு விசாரணை முகமை விசாரணை நடத்தி வருவதாகவும், ஏழு பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க, அதன் அறிக்கைக்காக ஆளுநர்  காத்திருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

இதையடுத்து, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் ஏற்கனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சூழலில் அவரை சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால், பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாகவும், சிறைத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2019-ல் அவர், பரோலில் சென்று வந்துள்ளார்.  மேலும், இதுபோன்ற சூழலில், பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலாளர்தான் முடிவெடுக்க வேண்டும் என விளக்கமளிக்கப்பட்டது.

 

இதை கேட்ட நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கு குறித்து விசாரிக்க கடந்த 1999-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட  பன்னோக்கு விசாரணை முகமையின் இறுதி அறிக்கைக்கு காத்திருப்பதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி கிருபாகரன், தற்போது அந்த விசாரணை முகமை செயல்பாட்டில்தான் உள்ளதா என சந்தேகம் எழுப்பினர். தற்போதைய விசாரணை நிலவரம் குறித்தும் கேள்வி எழுப்பினார். அப்போது, விசாரணையை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருவதாக சிறைத்துறை தரப்பில் விளக்கமளிக்கபட்டது.

 

பேரறிவாளன் உடல்நிலை மோசமடைந்தால்தான் பரோல் மனு பரிசீலிக்கப்படுமா எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.  

 

இதையடுத்து, கடந்த 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைத் தாக்கல் செய்ய,  பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை ஆகஸ்ட் 12- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்