பெண்களின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறியும் கும்பல் ஒன்று நேற்று (25.07.2024) தர்மபுரியில் இருந்து பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இந்தக் கும்பலை மருத்துவத்துறை அதிகாரிகள் சினிமா பட பாணியில் விரட்டி பிடித்தனர். சட்டவிரோதமாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் கும்பல் குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்தது.
இது குறித்து தகவலறிந்த தர்மபுரி மாவட்ட இணை சுகாதாரத்துறை இயக்குநர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் தர்மபுரியில் இருந்து இந்தக் கும்பலை விரட்டி வந்துள்ளனர். அந்தக் கும்பல் சேலம் வழியாக காரில் கர்ப்பிணி பெண்களை அழைத்துக் கொண்டு பெரம்பலூர் வந்துள்ளனர். பெரம்பலூர் நகரப் பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செங்குணம் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் சுற்றி வளைத்து பிடித்தனர். சட்டவிரோதமாக கருவில் இருக்கும் பாலினத்தை அறிவதற்கு அந்தக் கும்பல் ஆயத்தமாகிய நிலையில் அவர்கள் வைத்திருந்த கருவிகளுடன் பிடிபட்டனர்.
அதோடு ஸ்கேன் செய்வதற்கான சிறிய அளிவிலான கருவிகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் மாரிமுத்து போலீசில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கருவின் பாலினத்தை கண்டறிந்த கடலூரைச் சேர்ந்த முருகன் மீது போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.