இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரம் அண்ணாநகர் மாசாப்பேட்டையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 110 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த தலைமையாசிரியர் கீதா தலைமையில் 3 ஆசிரியைகள், 4 ஆசிரியர்கள் என 7 பேர் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த காலத்தில் இந்த பள்ளியில் 400க்கும் அதிகமானவர்கள் படித்துள்ளனர். அதன்பின் படிப்படியாக குறைந்துள்ளது. அதற்கு காரணம், பள்ளியை சுத்தமாக பராமரிக்காதது என குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். அதோடு, குடிநீர் தொட்டியை கூட சுத்தம் செய்வதில்லை, கழிப்பறை வசதி சரியாக செய்யவில்லை. இதுப்பற்றி தலைமையாசிரியர் கீதாவிடம் முறையிட்டபோது, அவர் நக்கலாக அரசு பள்ளினா அப்படித்தான் இருக்கும் போங்கன்னு மோசமா பேசியுள்ளார்.
கடந்த சுதந்திர தினத்தின்போது, காலையில் ஏற்றியகொடி மறுநாள் மதியம் தான் இறக்கினார் தலைமையாசிரியர் கீதா. இதுப்பற்றி இந்த பகுதி முக்கியஸ்தர்கள் கேட்டபோது, கொடி இறக்காததால இப்ப என்ன குடி மூழ்கிடுச்சின்னு கேட்டாங்க.
இதுப்பற்றியெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதனால் தான் பள்ளியை பூட்டி போராட்டம் நடத்துகிறோம் என்றார்கள். காலை 9 மணிக்கே பள்ளியின் வெளிப்புற கேட்டை பூட்டி மாணவர்களோடு சேர்ந்த அப்பகுதி பொதுமக்கள் போராடினர். தன்னை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது என்றதும் பள்ளிக்கு வந்துக்கொண்டுயிருந்த தலைமையாசிரியர் கீதா, அப்படியே திரும்பி வீட்டுக்கு போனவர், நான் அரைநாள் விடுமுறை என சக ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
ஆற்காடு நகர போலீஸார் வந்து சமாதானம் பேசியும் போராட்டத்தை கைவிடவில்லை. பின்னர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல, அதன்பின் மாவட்ட கல்வி அலுவலர் வந்து, பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளார். விசாரணை விபரத்தை மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ்சிடம் வழங்கி, அது மேலதிகாரிகளுக்கு சென்றபின்பே நடவடிக்கை என்ன என்பது தெரியும். அதுவரை பள்ளியை திறந்து நடத்த அனுமதியுங்கள் என பொதுமக்களிடம் பேச அவர்களும் சரியென்றுள்ளனர்.
இதேபோல், வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகேயுள்ளது துத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய ஆசிரியர்கள் இல்லையென அப்பகுதி பொதுமக்களும் பள்ளியை பூட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததால் சாலைமறியல் செய்தபின்பே அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.