அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாயி குளம் ஊரில் நேற்று முன்தினம் இரவு 3 நபர்கள் கையில் துப்பாக்கியுடன் மர்மமான முறையில் நடமாடியுள்ளனர். தற்செயலாக இதைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் ஊர் மக்களுக்கு தகவல் சொல்ல திரண்டு வந்த கிராம மக்கள் அந்த மூன்று பேரையும் சுத்தி வளைத்தனர். பின்னர் மூன்று பேரும் திருட வந்தவர்கள் என்று நினைத்து ஊர்மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து மூன்று பேரிடம் விசாரித்த போது, அவர்கள் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் சாலையில் உள்ள மகிமைபுரம் பஸ் நிலையம் எதிரே குடியிருக்கும் நரிக்குறவர்கள் சமூகத்தை தேர்ந்த ராமன், புகழேந்தி, சிவா என்பது தெரியவந்தது. மூன்று பேரும் இரவு நேரத்தில் மரத்தில் தங்கி இருக்கும் வவ்வால்களை வேட்டையாட வந்ததாகவும், தாங்கள் திருட வரவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் வைத்திருந்ததன் காரணமாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் பொதுமக்கள் தாக்கியத்தில் தலையில் காயம்பட்ட ஒருவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இரவு வேட்டைக்கு சென்றவர்களை திருடன் என நினைத்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.