சென்னை - எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதையை விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் வழியை மெயின் லைன் என்றும், விருத்தாசலம் வழியை காட் லைன் என்றும் ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.
இதில் மெயின் லைனில் பல ரயில்கள் இயக்கப்பட்டாலும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூருக்கு மெயின் லைனில் திருச்செந்தூர் அதிவிரைவு ரயில் தினமும் இருவழி மார்க்கமாக சென்னை, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக இயக்கப்பட்டு வருவது 10-க்கும் மேற்பட்ட மாவட்ட மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த ரயில் திருச்செந்தூரில் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், உள்ளிட்ட ஊர்களுக்கு அதிகாலையில் வருகிறது. சென்னைக்கு காலை 10 மணிக்குள் சென்றுவிடுகிறது அதே நேரத்தில் மாலை 4.10 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்குள் கும்பகோணத்தை வந்தடைகிறது. இதனால் கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களுக்கும் பணிகளை முடித்துக்கொண்டு திரும்பி வருபவர்களுக்கு பகல் நேரத்தில் இந்த ரயில் பயனுள்ளதாக உள்ளது. இதனால் இந்த ரயில் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதே நேரத்தில் சென்னையில் இருந்து மெயின் லைன் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரே ரயிலாகவும் உள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் 2 மாதத்திற்கு முன்பே பதிவு செய்தாலும் காத்திருப்போர் பட்டியல் தான் கிடைக்கிறது என்று பயணிகளின் வேதனையான குரலாக உள்ளது. முன்பதிவு கிடைக்கவில்லை என்று அவசர வேலையாக முன்பதிவு இல்லாப் பெட்டியில் பயணம் செய்தால் கூட்டம் தினந்தோறும் அலைமோதுகிறது. இந்தப் பெட்டியில் பயணிகளிடையே சண்டை இல்லாத நாளே இல்லை என்கின்றனர்.
இப்படியுள்ள சூழ்நிலையில் கோடை காலத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட 4 மடங்கு கூட்டம் அலைமோதுகிறது. பயணிகள் முன்பதிவு கிடைக்காமல் முன்பதிவு இல்லா பெட்டியில் கழிவறை, ரயில் பெட்டியின் வழிப் பாதை, வாசற்படி உள்ளிட்ட இடங்களில் இரவு நேரம் முழுவதும் நின்றுகொண்டே அவல நிலையில் பயணம் செய்கிறார்கள். சிலர் உடமைகள் வைக்கும் இடம் ரயில் பெட்டியின் கதவு மேல் அமர்ந்து பயணம் செய்வது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் இந்த ரயில் மாலையில் சென்னையில் புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மருவத்தூர், திண்டிவனம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிற்கும் போது அங்குள்ள பயணிகள் ஏற முடியாமல் தவித்து திரும்பி செல்கிறார்கள். சிலர் அடித்து பிடித்து ஏறிக்கொண்டு படியில் தொங்கியவாறு வருகிறார்கள். கடந்த 22 ஆம் தேதி செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இந்த ரயில் மாலை 5.10 மணிக்கு வந்தது. அப்போது முன்பதிவு இல்லாதப் பெட்டியில் ஏற்கெனவே அதிகக் கூட்டம். அதில் முண்டியடித்து ஏறிய கல்லூரி மாணவர் ஒருவர் பையைத் தோளில் மாட்டியவாறு ரயில் படியில் தொங்கியவாறு வந்தபோது திடீரென ரயில் நிலையம் நடைமேடையின் கடைசியில் கீழே தொப்பென விழுந்தார். அவரை பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது போன்ற சம்பவங்கள் தினந்தோறும் பல நடந்து வருகிறது.
எனவே செந்தூர் ரயிலில் முன், பின் என 2 முன்பதிவில்லா பெட்டிகள் உள்ளது. கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளை ஒதுக்க வேண்டும். மேலும் திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து பகல் நேரத்தில் கூடுதலாக ஒரு ரயிலை இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து சிதம்பரம் ரயில் பயணிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவராம வீரப்பன் கூறுகையில், “ சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம், நடராஜ கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் சிதம்பரத்திற்கு ரயில் முன்பதிவை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். இங்கு தான் அதிகமாக முன்பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் தேர்தலுக்கு முன் மைசூர் ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டு சிதம்பரத்தில் நின்று செல்லும் என அறிவித்ததை விரைவில் அமல்படுத்த வேண்டும். சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு ஒரே ரயில் மெயின் லைன் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் கட்டுக்கடங்கா கூட்டம் தினந்தோறும் செல்கிறது. இதனால் அவசர வேலையாக செல்வதற்கு முன்பதிவு இல்லா பெட்டியில் ஏற முடியாமல் பலபேர் ஏமாற்றம் அடைகிறார்கள். திருச்செந்தூர் ரயிலில் முன்பதிவில்லாதப் பெட்டியை அதிகப் படுத்த வேண்டும்.
அதே நேரத்தில் சென்னையில் இருந்து மெயின் லைனில் காலை 8 மணிக்கு திருச்சிக்கு செல்லும் சோழன் அதிவிரைவு ரயிலை விட்டால் மாலை 4.10 மணிக்கு தான் செந்தூர் ரயில் இதில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள், தென்மாவட்ட மக்கள் என அதிகளவு கூட்டமாக உள்ளது. இதனால் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை மாவட்ட பயணிகள் பயணம் செய்வதில் பெருத்த சிரமம் உள்ளது. எனவே இவர்கள் பயன்பெறும் வகையில் மாலையில் செந்தூர் ரயிலுக்கு முன் சென்னை முதல் திருச்சி வரை விரைவு ரயிலை மெயின் லைனில் இயக்க வேண்டும். இதனால் செந்தூர் ரயிலில் கூட்டம் குறையும். ரயில்வே நிர்வாகம் பயணிகளின் துயரத்தை கருதி போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.