தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.
“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.