திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை அடிவாரத்திற்கு அருகேயுள்ளது இருணாப்பட்டு கிராமம். இந்த கிராமத்தின் வயல்களுக்கு மலையிலிருந்தும், அப்பகுதியில் உள்ள காப்புக்காட்டு பகுதியில் இருந்தும் வரும் பறவைகள், காட்டு விலங்குகள் உணவு பயிர்களை நாசம் செய்துவிட்டு சென்றுவிடும். இந்த மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான மயில்களும் உள்ளன. அவைகளும் அடிக்கடி விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு வந்து தன் பசிக்காக பயிர்களை நாசம் செய்துவிட்டு செல்லும்.
அதே கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான மேகநாதன் என்பருக்கு இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் நெல், மணிலா என பயிர் செய்துவருவார். தற்போது நெல் பயிர் செய்துள்ளாராம். அதனை மயில்கள் உட்பட பறவைகள் வந்து சாப்பிட்டுவிட்டு செல்வதால் பயிர்கள் நாசமாவதை தடுக்க பூச்சி மருந்து வாங்கிவந்து உணவு தானியத்தில் கலந்து வயல் பகுதியில் வைத்துள்ளார். ஜனவரி 28ஆம் தேதி மதியம் விஷம் கலந்து வைத்திருந்த உணவு தானியத்தை சாப்பிட்ட மயில்கள் சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்துள்ளன.
இதனைப்பார்த்த அப்பகுதியிலிருந்த மற்ற விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுக்குறித்து மேகநாதனிடம் கேள்வி எழுப்பியவர்களிடம் ‘என் பயிரை நாசம் செய்யுது, அதான் விஷம் வச்சேன், சாவட்டும்’ என பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியானவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் இருந்து வந்த வனத்துறை காவலர்கள், இறந்த மயில்களை கைப்பற்றி பிரதேப் பரிசோதனை செய்தனர். அதோடு விஷம் வைத்த மேகநாதனை கைது செய்தனர்.
இதுக்குறித்து திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலர் நாக் சதிஷ் கிரிஜலா, “மயில் நம் நாட்டின் தேசியப்பறவை, அதை கொல்வது சட்டப்படி குற்றம். அதற்கு அதிகபட்ச தண்டனை உண்டு” என்றார்.