சேலத்தில், இளம்பெண்களை ஆபாசப்படம் எடுத்து மிரட்டியதாகக் கைது செய்யப்பட்ட அழகுநிலைய உரிமையாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட மகளிர் காவல்நிலையம் அதிரடியாக இழுத்து மூடப்பட்டது. காவல்துறையினரும், சிறைத்துறையினரும் கரோனா தொற்று இருக்குமோ எனப் பீதி அடைந்துள்ளனர்.
சேலம் தாதகாப்பட்டி சீரங்கன் 4- ஆவது தெருவைச் சேர்ந்தவர் லோகநாதன் (35). இவருடைய மனைவி ரூபா. இவர்கள், வீட்டிலேயே அழகுநிலையம் நடத்தி வருகின்றனர். அழகுநிலையத்திற்கு வரும் ஏழைப் பெண்கள், கணவனை இழந்த மற்றும் பிரிந்து வாழும் பெண்களை மயக்கி அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளையும், அவர்களின் தனிப்பட்ட சில ஆபாசப்படங்களையும் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்தப் படத்தைக் காட்டி பெண்களை அடிக்கடி மிரட்டி லோகநாதன் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதோடு, தனக்குத் தெரிந்த வாடிக்கையாளர்களுக்கும் விருந்தாக்கி உள்ளார்.
இச்சம்பவத்தில் லோகநாதனின் நண்பர்களான தாதகாப்பட்டி வசந்த நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்கிற சிவா (36), பங்களா தோட்டம் பராசக்தி நகரைச் சேர்ந்த அஜய் என்கிற பிரதீப் (28) ஆகியோருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து நான்கு பெண்கள் அளித்த புகாரின்பேரில், லோகநாதன், சிவா, பிரதீப் ஆகிய மூவரையும் சேலம் நகர அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர். லோகநாதனின் மனைவி ரூபா தலைமறைவாகி விட்டதை அடுத்து, அவரை தேடி வருகின்றனர்.
கரோனா தொற்று அபாயம் உள்ளதால், புதிதாகக் கைது செய்யப்படும் கைதிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி லோகநாதன் உள்ளிட்ட மூவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை (மே 29- ஆம் தேதி) காலையிலேயே கைதிகள் மூவரையும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, ஓமலூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து கரோனா பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், முக்கிய குற்றவாளியான லோகநாதனுக்கு மட்டும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போதும், கைது செய்வதிலும் உதவி கமிஷனர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் குமார், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் உள்பட 30 பேர் முக்கியப் பங்காற்றினர். தற்போது கைதிகளுள் ஒருவருக்கு கரோனா உறுதியானதால் 30 பேருமே தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். காவல்நிலையத்தில் லோகநாதனிடம் நெருங்கி விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் பீதி அடைந்துள்ளனர்.
குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வீட்டுக்குச் சென்ற பெண் காவலர்கள் பலர், தங்களது பிள்ளைகளுடன் எப்போதும்போல் நெருக்கமாக இருந்துள்ளனர். தற்போது லோகநாதனுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் தங்களுக்கும், தங்கள் மூலமாக வீட்டில் இருப்பவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என கலக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையம், நகர காவல் நிலையங்களுக்கு கரோனா கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. மேலும், மகளிர் காவல்நிலையம் அதிரடியாக இழுத்து மூடப்பட்டது.
அதேநேரம் லோகநாதன் ஓமலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டபோது அவரை தொட்ட சிறைத்துறை அதிகாரிகள், கைதிகள் என 81 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே, நேற்று முன்தினம் (மே 28- ஆம் தேதி) இரும்பாலை காவல்நிலையத்தில் கைதான வாலிபர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு பணியாற்றி வந்த 15 காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். காவல்நிலையத்திற்கு வெளியே சாமியானா பந்தல் போடப்பட்டு, அங்குதான் தற்போது தற்காலிகமாக இரும்பாலை காவல்நிலையம் இயங்கி வருகிறது.