காட்டுமன்னார்குடி, ராயநல்லூர் ரேஷன் கடையில் தரமான அரிசி கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
காட்டுமன்னார்குடி வட்டம், ராயநல்லூர் ஊராட்சி ரேசன் கடையில் 550 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கடையில் 25 தேதி ஆகியும் இதுநாள் வரையில் சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கியபோது, ரேஷன் அரிசி துர்நாற்றம் அடித்தது. இதனைப் பொதுமக்கள் வாங்க மறுத்து அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில், ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்பு வட்ட வழங்கல் அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தரமான அரிசி போட வேண்டுமென பேசியபோது, இம்மாதம் தரமான அரிசி போடப்படும் எனவும் இனிமேல் இப்படி துர்நாற்றம் அடிக்கிற அரிசியை போடமாட்டோம் எனவும் உறுதி அளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலைந்து சென்றனர். போராட்டத்தில் வட்ட துணைச்செயலாளர் சந்திரன், வட்ட துணைத் தலைவர் குமார், கிளை நிர்வாகிகள் சித்ரா, பாக்கியலட்சுமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.