![makkal](http://image.nakkheeran.in/cdn/farfuture/RYDALxo85EqJMlzlv_gBzLdOIKLQTlNr3RBBf9KUyo4/1533347660/sites/default/files/inline-images/makkal_0.jpg)
கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தை கட்சியாக ஏற்றது தேர்தல் ஆணையம். அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் கமலின் மக்கள் நீதி மய்யம் சேர்க்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார். அதன்பின்னர் தனது கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து, கமல்ஹாசன் விண்ணப்பம் மீது யாருக்கும் ஆட்சேபம் இருந்தால் அதை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததை அடுத்து கமல்ஹாசனை தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. ஜுன் 20ம் தேதி கமல்ஹாசன் மற்றும் அவரது கட்சியின் தலைமை நிர்வாகிகள், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின், பதிவு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’கட்சிக்கு அங்கீகாரம் பெறுவது தொடர்பாக மட்டுமே அதிகாரிகளிடம் பேசியிருக்கிறோம். கூடிய விரைவில் அங்கீகாரம் கிடைக்கும்’’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தை கட்சியாக ஏற்றது தேர்தல் ஆணையம். அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலில் கமலின் மக்கள் நீதி மய்யம் சேர்க்கப்பட்டுள்ளது.