Skip to main content

4 -வது நாளாகத் தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம்!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

Chidambaram annamalai university raja muthiah medical students

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிற அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கல்விக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து 4-வது நாளாக அறவழியில் போராட்டம் நடத்திவருகின்றனர். 

 

இக்கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணமாக ரூ.9.6 லட்சம் மற்றும் இளங்கலை மருத்துவக் கல்விக் கட்டணமாக ரூ.5.5 லட்சம் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல், முதுகலை பல் மருத்துவம் ரூ.8 லட்சமும், இளங்கலைக்கு ரூ.3.5 லட்சமும் வசூலிக்கப்படுகிறது. 

 

அரசு இதனை, கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்த பிறகும், தனியார் கட்டணத்தைவிட அதிக கல்விக் கட்டணம், வசூலிக்கப்படுவதைக் கண்டித்து இதற்கு முன்னரே பல்வேறு கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தியும், எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்பெறாததால், கடந்த 4 நாட்களாகத் தொடர் போராட்டங்களை, அனைத்து மருத்துவ மாணவர்களும், நோயாளிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றி, அறவழியில் போராடி வருகின்றனர். மூன்றாவது நாளில் மொபைல் டார்ச்லைட் வெளிச்சத்தில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4ஆம் நாளில் மதிய உணவு இடைவெளியின்போது கறுப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தமிழக முதல்வர், மருத்துவ மாணவர்களின் நலன் காக்க  உடனடியாகத்  தலையிட்டு,  பிற அரசு மருத்துவக் கல்லூரிக்கு இணையான கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்கள். மாணவர்களின் போராட்டம் தொடர் போராட்டமாக தீவிரமடைந்து வருகிறது. தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. மாணவர்களின் நலனைப் பாதுகாக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களை உங்கள் மார்க் எங்க கையில் உள்ளது என்று மிரட்டி வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனையும் மீறி மாணவர்கள், தொடர் போராட்டத்தைப் பல்வேறு வடிவங்களில் செயல்படுத்தி வருகிறார்கள். சரியான நடவடிக்கை இல்லையென்றால், பல்கலைக்கழக அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைத்துப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்