இந்திய தடகள சங்கத்தின் சார்பில் இந்தியா முழுவதும் இளையோருக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான போட்டியை நடத்த தமிழ்நாடு மாநில தடகள சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது இந்திய தடகள சங்கம். தமிழ்நாடு மாநில தடகள சங்கம், தேசிய அளவிலான போட்டியை திருவண்ணாமலையில் நடத்த வேண்டும் என்று அந்த மாவட்ட தடகள சங்கம் கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் திருவண்ணாமலையில், தமிழ்நாடு மாநில தடகள சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து நடத்தும், 17- வது தேசிய இளைஞர் தடகள இளையோர் கூட்டமைப்புக்கான போட்டி நடத்த முடிவு செய்துள்ளது.
வரும் செப்டம்பர் 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 26ந்தேதி வரையிலான 3 நாட்கள் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க தலைவர் மருத்துவர் எ.வ.கம்பன் கூறும் போது, தேசிய இளைஞர் தடகள இளையோர் கூட்டமைப்பு கோப்பைக்கான போட்டிகள் திருவண்ணாமலையில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 950 முதல் 1000 போட்டியாளர்கள் கலந்துக்கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்முறையாக கோப்பையோடு இணைத்து பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.
ஒரு தேசிய அளவிலான தடகள போட்டி திருவண்ணாமலையில் நடைபெறுவது பெருமைக்குறியது. அதனை நடத்துவதில் மாவட்ட தடகள சங்கம் பெருமைப்படுகிறது. இதில், சர்வதேச, தேசிய போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற பல வீரர்களும் இதில் கலந்துக்கொள்கின்றனர். இறுதி நாள் நிகழ்வில் மாநில தடகள சங்க தலைவர் தேவாரம், திருச்சி மாநகர காவல்துறை இணை ஆணையர் மயில்வாகனம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துக்கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள் என்றார்.
தமிழ்நாடு மாநில தடகள சங்கத்தின் செயலாளர் லதா கூறும்போது, 46 பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. காலை முதல் மாலை வரை நடைபெறும். இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் இந்த விளையாட்டை நடத்த 250- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். போட்டியில் கலந்துக்கொள்பவர்களுக்கான மருத்துவ மற்றும் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தும் அரசின் நாடா என்கிற அமைப்பின் மருத்துவர்களும் இங்கு வந்துள்ளனர். அவர்களின் பரிசோதனைக்கு பின்பே வீரர்கள் போட்டியில் கலந்துக்கொள்வார்கள்.
பிற மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், சர்வதேச, தேசிய அளவில் கலந்துக்கொண்டு பரிசுகள் பெற்ற விளையாட்டு வீரர்கள் திருவண்ணாமலை வரும்போது, இங்கு இப்படிப்பட்ட தேசிய அளவிலான மைதானம்மா என ஆச்சரியப்படுவார்கள். ஏன் எனில் இந்தியாவில் சிறந்த மைதானங்கள் என்பது குறைவு. ஆனால் தமிழகத்தில் 9 மைதானங்கள் உள்ளன. இதன் மூலம் விளையாட்டில் தமிழகத்தின் பெருமை மற்ற மாநிலங்களுக்கு விளங்கும்.
இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து 63 பேர் கலந்துக்கொள்கிறார்கள். கடந்த ஆண்டு ஹரியானா மாநிலம் முதலிடத்தை பிடித்தது. இந்த ஆண்டு தமிழக வீரர்கள் முதலிடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார். ஒரு தேசிய அளவிலான போட்டி திருவண்ணாமலையில் நடைபெறுவதால் விளையாட்டு வீரர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.