தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (19/02/2022) நடைபெற உள்ள நிலையில், செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று (18/02/2022) இரவு 07.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது மாநில தேர்தல் ஆணையர் கூறியதாவது, "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம்; விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் இடங்கள், வாக்கு எண்ணிக்கை இடங்களில் சிசிடிவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 268 வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்களைப் பாதுகாக்கும் அறைக்கு உள்ளேயும், வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை நகர் பகுதியில் மட்டும் 2,723 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவையில் தங்கியிருந்த வெளியூர்க்காரர்களை ஏற்கனவே வெளியேற்றிவிட்டதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
கரோனா நோயாளிகள் மாலை 05.00 மணி முதல் 06.00 மணி வரை வாக்களிக்கலாம். இதுவரை 11.89 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது." இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.