தென்காசி மாவட்டம், சங்கரன்கோவின் தாலுகாவில் விவசாயத்திற்கு அடுத்த பிரதான தொழில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி. நேர்முகம், மறைமுகம் என்று சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே 6,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள்தான். இந்தத் தொழிலுக்கு அரசு உதவி அவ்வளவாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
கரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வருகின்ற நேரத்தில், நூல் விலை அதிகரித்துள்ளது நெசவாளர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. நைஸ் ரக நூலின் விலை கட்டு ஒன்றுக்கு ரூ.395 என்ற அளவு உயர்ந்துள்ளதால், நெசவுத் தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால், போராட்டம், அரசின் கவன ஈர்ப்பு என்றாகியிருக்கிறது சங்கரன்கோவில் நிலை. இது, சங்கரன்கோவிலுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் ஜவுளி உற்பத்தித் திறனின் மீது ஏற்பட்ட பெரும் சுமை என்கிறார்கள் விசைத்தறி நெசவுத் தொழிலாளர்கள்.
இன்று அறிவித்தபடி நகரின் அனைத்து விசைத்தறிக் கூடங்களும் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சி.பி.எம்.மின் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., பாரதிய மஸ்தூர் சங்கம் என்று அனைத்துக் கட்சிகளும் இணைந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான சுப்பிரமணியன், “தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியான சுயசார்பு தொழில் விசைத்தறி நெசவு ஜவுளி உற்பத்தி. சிமெண்ட் விலை உயருகிற போதெல்லாம் அரசு உடனே தலையிட்டு எவ்வாறு விலையைக் கட்டுப்படுத்துகிறதோ, விவசாய விளைபொருளுக்கான அடிப்படை ஆதார விலையை அரசு நிர்ணயிக்கிறதோ, அதே போன்று நெசவுத் தொழிலின் மூலப் பொருளான நூல் விலையையும் கட்டுப்படுத்தி அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நெசவுத் தொழில் மற்றும் நெசவாளர்கள் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்படும்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் தலைவர் உள்ளிட்ட பலரும் இதனையே வலியுறுத்தியதுடன் மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.