திருபத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் செலந்தம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண். இவருக்கும் இவரது மனைவிக்கும் நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாக கூறி கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
எனினும் மூன்று தினங்களுக்கு முன் ஒரு பெண் குழந்தை இறந்த நிலையில் மற்றொரு பெண் குழந்தைக்கு சிகிச்சை தொடர்ந்து வந்தது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கையில் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விவரத்தை அறிந்த செய்தியாளர்கள் செய்தியை சேகரிக்க அங்கு சென்றனர். அப்போது இறந்த அக்குழந்தையின் தாய், “பாப்பா அம்மாவ பாரு பாப்பா. உன்ன வீடியோ எடுக்குறாங்க பாரு பாப்பா” என்று கதறி அழுதார். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.
குழந்தைகளிம் தந்தை கூறுகையில், “குழந்தைங்க நல்லா இருக்குதுனு சொல்லியே ஒரு மாசமா இங்கயே இருந்ததுங்க. அப்பப்போ ஒரு ஊசி 1000 ரூபாய்க்கு வாங்கி கொடுத்தும் காப்பாத்த முடியல. முப்பதாயிரத்துக்கு ஊசி வாங்கி கொடுத்தும் ரெண்டு குழந்தைங்களும் இறந்துடுச்சு. இன்னைக்கு காலைல 10 மணிக்கு ஒரு குழந்த நல்லா இருக்குனு டாக்டர் வந்து சொன்னாரு. சாயந்தரம் 5 மணிக்கு குழந்த இறந்துடுச்சுனு என் மனைவி கிட்ட சொல்லி இருக்காங்க. இதுக்கு அரசு ஒரு நடவடிக்கை எடுக்கனும்” என்றார்.