கோப்புப்படம்
வேலூர் அடுத்த சித்தேரி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் திருக்கோவில். இக்கோவிலுக்கு இன்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி வந்தபோது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கோவிலின் உண்டியல் காணாமல் போயுள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து பூசாரி கோவில் தர்மகர்த்தா ரவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்து அரியூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் திருடு போன உண்டியல் கோவிலில் இருந்து சற்று தொலைவில் உள்ள சித்தேரி ரயில்வே தண்டவாளம் அருகே கிடப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, இன்று அதிகாலை முகத்தை மறைத்தபடி அரைக்கால் சட்டையுடன் உள்ளே நுழைந்த இரண்டு (புள்ளிங்கோ திருடர்கள்) இளைஞர்கள். கோவிலுக்கு உள்ளே உள்ள சில்வராள் செய்யப்பட்ட கோவில் உண்டியலை இரும்பு ராடு கொண்டு உடைக்க முயற்சித்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் உண்டியலை உடைக்க முடியாமல் திணறி பதற்றத்துக்குள்ளான இரண்டு திருடர்கள் பட்ட கஷ்டம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக கன நொடியில் யோசித்து உண்டியலை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். திருடர்கள் உண்டியலை திருட திக்குத் திணறிய காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
மேலும் இக்கோவிலில் கடந்த மாதம் (01.06.2023) ஒன்றாம் தேதி கும்பாபிஷேகமும், கடந்த சில நாட்களாக மண்டல பூஜையும் நடைபெற்றுள்ளதாகவும். அதேசமயம் கடந்த ஆறு மாதங்களாக உண்டியல் பணம் வெளியே எடுக்காத சூழலில் சுமார் 50,000 ரூபாய் வரை திருடு போயிருக்கலாம் என கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையிலும், கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த அரியூர் காவல்துறையினர் தப்பிச்சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.