
ஈரோட்டில் பயணியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள மினி பேருந்து ரேக் பகுதியில் தர்மபுரி மாவட்டம் நடுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (49) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் கண்ணிமைக்கும் நேரத்தில் ரமேசின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரமேஷ் 'திருடன் .. திருடன்' எனக் கூச்சலிட்டார். அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த மற்ற பயணிகள் ஒன்றிணைந்து இரண்டு நபர்களையும் பிடித்து பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் ஈரோடு நாராயண வலசு பகுதியைச் சேர்ந்த தியாகு (33), ஈரோடு வீரப்பன்சத்திரம் பெரிய வலசு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (45) என தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் போலீசார் அவர்களை கைது செய்தனர்.