காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம், தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையிலும், தற்பொழுது வரை நீர் திறக்கப்படவில்லை. நேற்று முன்தினம் காவிரி மேலாண்மைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அன்று மாலையே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி டெல்லியில் நேற்று சந்தித்தனர். காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில் உள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “தண்ணீர் இருக்கு என்கிறோம் நாங்கள். பல பல டேம்களில் தேக்கி வைத்துள்ளார்கள் என்று சொல்கிறோம் நாங்கள். இல்லை என்று சொல்கிறார்கள் அவர்கள். ஆனால் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடித்துச் சொல்லக் கூடிய அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. இந்த இரு அமைப்புகளும் அவர்களுடைய ஆட்களை வைத்து உறுதி செய்ய வேண்டும். 13ம் தேதி 12,500 கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு தரலாம் என்று சொன்னார்கள். ஆனால் அன்று மாலையே காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு 5,000 கன அடி என்று சொன்னார்கள். நான் கேட்பது, காவிரி ஒழுங்காற்றுக் குழு முறையாக நடக்கிறதா அல்லது கர்நாடகாவிற்கு அனுசரணையாக நடக்கிறதா? என்று அமைச்சரிடம் கேட்டேன். ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்றால் நீங்கள் மத்திய அமைச்சர் இதை நீங்களே கேட்கவில்லை என்றால் எப்படி என்றேன்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் சேர்மனும் வந்திருந்தார். அவரிடம் கேட்டேன், எப்படி டூயல் ரோல் எடுக்கறீங்க.13 ஆம் தேதி ஒரு உத்தரவு கொடுக்குறீங்க. அப்புறம் வேற உத்தரவு கொடுக்குறீங்க. கர்நாடக சார்பில் ஒருவர் சொன்னாராம் எங்களுக்கு தண்ணீர் குடிக்க தேவைப்படுகிறது என்று, எங்களுக்கு மட்டும் என்ன வாரி கொட்டவா தேவைப்படுகிறது. எங்களுக்கும் தான் குடிக்கத் தேவைப்படுகிறது. இதையெல்லாம் ஒழுங்காற்றுக் குழுவில் இருக்கும் மெம்பரே சொல்லக்கூடாது. இதுதான் பார்சியாலிட்டி” என்றார்.