இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' மற்றும் மெட்ராஸ் ரெக்கார்ட் நிறுவனம் இரண்டும் இணைந்து 'கேஸ்ட் லெஸ் கலக்ட்டிவ்ஸ்' இசைக்குழு நடத்தும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகின்றன. கடந்த ஜனவரி மாதம் சென்னை கீழ்பாக்கம் CSI பெயின் பள்ளியில் நடந்ததுதான் முதல் விழா. பின்னர் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் சில தருணங்களில் இவர்களது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சாதி ரீதியான வித்தியாசங்கள், அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியம் மிக்க வரிகள் கொண்ட பாடல்கள், வரவேற்பை பெற்றன, நிகழ்ச்சியும் வெற்றிபெற்றது.
இயக்குனர் ரஞ்சித் இயக்கம் 'காலா' திரைப்படத்திலும் இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் பணியாற்றியுள்ளனர். ஏற்கனவே 'மஞ்சல்' என்று நாடக வடிவில் மனிதக் கழிவை அள்ளும் அவலத்துக்கு ஆளான சுகாதார பணியாளர்களின் வாழ்வை வெகுஜனத்தின் முகத்தில் அடிப்பது போல் காட்டியது நீலம். இப்பொழுது இசை வடிவிலும் கருத்துக்களை பரப்பும் முயற்சியை செய்கிறது.
மீண்டும் கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ பெயின் பள்ளியில் 19.05.18 தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எட்டு பேண்ட் குழுக்கள் மற்றும் பல இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை மெட்ராஸ் மேடை, மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ், நீலம் பண்பாட்டு மையம் சேர்ந்து நடத்துகிறது. சென்றமுறை போன்று இந்தமுறையும் சமூகபுரட்சி மற்றும் பெண்களுக்கான புரட்சிகர பாடல்களும் இருக்குமாம். இந்த முறையும் சமத்துவத்திற்கான நிகழ்ச்சியாகவே இது அமையும் என விழாக்குழுவின் சார்பில் கூறப்பட்டுள்ளது. தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தன்னை சார்ந்த மக்களுக்கான செயல்பாடுகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தும் ரஞ்சித்தைப் பலரும் பாராட்டுகின்றனர்.