இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர்.
இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அறிவுறுத்தியிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்திருந்தது.
இந்த நிலையில் மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்ததன் காரணமாகச் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததன் மூலம் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு அபாயகரமான சூழலை எட்டியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 322 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருக்கிறது. வேளச்சேரி - 308, அரும்பாக்கம் - 256, ஆலந்தூர் - 256, ராயபுரம் - 232 என பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 ஐ தாண்டியுள்ளது. இதனால் அதிக பாதிப்பு மற்றும் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 141 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.