Skip to main content

'பரந்தூர் விமான நிலையம் மிகவும் அவசியமானது'-அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

Published on 19/01/2025 | Edited on 19/01/2025
 'parandur airport is very necessary'- Minister Tennarasu interview

விருதுநகர் மல்லாங்கிணறு பகுதியில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், ''எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசுகின்ற பொழுது தமிழ்நாட்டினுடைய நிதிநிலைமை குறித்து முற்றிலும் தவறான தகவல்களை சொல்லி இருக்கிறார். ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஏதோ தமிழ்நாட்டினுடைய நிதி நிலைமை திவாலாகப் போகிறது போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை அவர் வைத்திருப்பது வருந்ததக்கதும் மட்டுமல்ல என்னை பொருத்தமோட்டில் வேடிக்கையாகவும் இருக்கிறது.

பொருளாதாரம் குறித்தும் நிதி மேலாண்மை குறித்தும் எந்த அடிப்படையும் தெரியாதவர்களால் இதுபோன்ற அடிப்படைற்ற குற்றச்சாட்டுகளை கடன் அளவை பொருத்தமட்டில் அரசின் மீது வைக்க முடியும். எந்த ஒரு புள்ளி விவரத்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அது எந்த காலகட்டத்தில் அந்த புள்ளி விவரம் என்பதை நாம் அறிந்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார் 'எங்கள்  ஆட்சியில் இருந்த பத்தாண்டுகள் குறைவாக கடன் வாங்கினோம். ஆனால் நீங்கள் இந்த நான்காண்டுகளில் அதிகமாக கடன் வாங்கி இருக்கிறீர்கள்' என்று சொல்கிறார். அப்படி சொல்லுவது ஒரு அடிப்படை புரிதல் இல்லாமல் இருக்கிறது என்பதை நான் சொல்லியாக வேண்டும். நிதிக் குழு பரிந்துரைத்துள்ள வரம்பை விட குறைவாகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கி உள்ளது'' என்றார்.

தொடர்ந்து பரந்தூர் விமான நிலையம் குறித்து அமைச்சர் தென்னரசு பேசுகையில், ''பரந்தூர் விமான நிலையம் மிக அவசியமான ஒன்று. தவெக தலைவர் விஜய் மக்களை தாராளமாக சந்திக்கலாம். விமான நிலையத்தை உருவாக்குவது என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகுந்த அவசியமான ஒன்று என்பதை நாம் யாரும் மறுத்து விட முடியாது. ஏன் பரந்தூர் விமான நிலையம் அவசியமாக இருக்கிறது என்றால் இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு நகரங்கள் டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் என எதை எடுத்துக் கொண்டாலும் நம்முடைய இப்போது இருக்கக்கூடிய சென்னை விமான நிலையம் மிகச் சிறிய விமான நிலையமாக இருக்கிறது.

டெல்லியினுடைய அளவை எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ 51 ஆயிரம் ஏக்கர்,  மும்பை விமான நிலையம் 1,850 ஏக்கர். ஹைதராபாத்தில் 5,500 ஏக்கர், பெங்களூரில், 4,008 ஏக்கர். ஆனால் சென்னை விமான நிலையத்தின் பரப்பளவு 1,300 ஏக்கர் தான் இருக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் ஒரு வருடத்திற்கு 2 கோடி பேர் இந்த விமான நிலையத்திற்கு வந்து போகிறார்கள். ஒரு நாளைக்கு சராசரியாக 60 ஆயிரம் பேர் வருகிறார்கள். இன்று இந்த சூழ்நிலை என்றால் இன்னும் ஒரு ஏழு வருடம் கடந்து பார்த்தீர்கள் என்றால் பயணிகள் எண்ணிக்கை 3.5 கோடியாக ஒரு வருடத்திற்கு அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கிறது.

அடுத்த பத்து வருடத்திற்கு சென்றால் ஏறத்தாழ 8 கோடி பயணிகள் வருவார்கள். இவ்வளவு பெரிய எஸ்டிமேட் இருக்கும் பொழுது சென்னையில் இருக்கக்கூடிய விமான நிலையத்தின் பரப்பளவு 1,300 ஏக்கர் தான் இருக்கிறது. எவ்வளவு தான் விரிவு படுத்தினாலும் பயணிகளுடைய எண்ணிக்கையை சமாளிக்க முடியாது. சென்னை விமான நிலையத்தை சுற்றி பல்வேறு வீடுகள், நகர்ப்புறங்கள் உருவாகி இருக்கிறது. அவற்றையெல்லாம் எதுவும் செய்ய முடியாது. அதற்குள் உள்ள நிலப்பரப்பில் தான் நாம் விரிவு படுத்த முடியும். குடியிருப்பு பகுதியை நாம் எதுவும் செய்ய முடியாது. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்திருக்கிறோம்'' என்றார்.

சார்ந்த செய்திகள்