திருச்சியை அடுத்த ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் சிவன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத்தின் சார்பாக கடந்த 2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அல்லூர் மேலச் சேரியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் கேள்வி கேட்கும்போது ஊராட்சி மன்றத் தலைவர் விஜயேந்திரன் அவரை சாதிப்பெயரை சொல்லித் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த 10ஆம் தேதி ஆனந்த் தனது மனைவியுடன் காரில் செல்லும்போது காரை வழிமறித்து சாதிப்பெயரைச் சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜீயபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி, ஊராட்சி மன்றத் தலைவர் விஜயேந்திரன், அவரது ஆதரவாளர்களான பிரபாகரன், மணிகண்டன், விக்ரம் என்ற வீரப்பன் உள்ளிட்ட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபோல் நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயேந்திரன் மனைவி கோமதி, ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்தப் புகாரில், ‘தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது மேலச்சேரியைச் சேர்ந்த பாரதிய ஜனதா வடக்கு மண்டல தலைவர் ஆனந்த், அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஒருவர், துணைத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் இரண்டு காரில் வந்து தகாத வார்த்தையால் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன்பின் ஆனந்த், பிரகாஷ் உட்பட 7 பேர் மீது ஜீயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர்.