Skip to main content

நீதிமன்ற உத்தரவை மீறி எட்டு வழிச்சாலைக்கு மண் பரிசோதனை! விவசாயிகள் கொந்தளிப்பு!!

Published on 21/09/2018 | Edited on 21/09/2018

சேலத்தில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையும் மீறி எட்டு வழிச்சாலைக்காக மண் பரிசோதனை செய்யும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டதால் சுற்றுவட்டார விவசாயிகள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.


சேலம் - சென்னை இடையில் 277.3 கி.மீ. தூரத்திற்கு, எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.10 ஆயிரம் கோடி. இந்த புதிய சாலை வழித்தடம் சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் பயணித்து காஞ்சிபுரம் படப்பையில் நிறைவு அடைகிறது. இந்த திட்டத்திற்கு அரசு சொல்லும் இரண்டு முக்கிய காரணங்களில் ஒன்று... சேலம் - சென்னை பயண நேரம் இரண்டரை மணி நேரமாக குறைகிறது. மற்றொரு காரணம், ஆண்டுக்கு ரூ.700 கோடி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மிச்சமாகிறது.

 

8way

 

இந்த திட்டத்துக்காக மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு, திருவண்ணாமலையில் கவுத்திமலை, வேடியப்பன்மலை ஆகிய இரண்டு மலைகளை குடைந்தும் சுரங்கவழிப்பாதை அமைக்கப்படுவதும் திட்டத்தின் முக்கிய அம்சம். இத்திட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. ஏனெனில் கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களில் 90 சதவீதத்திற்கும் மேலான நிலப்பரப்பு சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள். அவர்களுக்கென்று இருக்கும் கடைசி நம்பிக்கையும், ஒரே ஜீவாதாரமும் அந்த நிலம் மட்டுமே.

 


விளை நிலம் பறிபோவது மட்டுமே எதிர்ப்புக்கு காரணம் அன்று. சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை, ஜருகுமலை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கவுத்திமலை, வேடியப்பன் மலைகளில் பொதிந்து கிடக்கும் இரும்பு உள்ளிட்ட தாது வளங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிச்செல்வதற்காக இந்த புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது என்ற அய்யமும் மக்கள் மனதில் இருந்து வருகிறது. 

 


இதற்கிடையே பாமக எம்.பி., அன்புமணி ராமதாஸ், தர்மபுரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி, 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த செப். 14ம் தேதி, மேலும் இரு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுவரை இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தல், உட்பிரிவு செய்தல் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதும் அந்த உத்தரவின் முக்கிய அம்சம் ஆகும்.

 

8way

 

நேற்று (செப். 20, 2018) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காவிட்டால் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர். இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த இரு நாள்களாக சேலம் எருமாபாளையம், சன்னியாசிக்குண்டு அருகே உள்ள ஜருகுமலையில் எட்டு வழிச்சாலைக்காக மண் பரிசோதனை செய்யும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மிக ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர். 200 அடி ஆழம் வரை துளையிட்டு பரிசோதனை செய்துள்ளனர். 

 


இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது ஜருகுமலையில் சில இடங்களில் பாறைகள் உருண்டு ஓடியதால் மலையடிவாரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். மண் பரிசோதனை பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எருமாபாளையம், பாரப்பட்டி, நிலவாரப்பட்டி, மின்னாம்பள்ளி பகுதி விவசாயிகள், பொதுமக்கள் இன்று காலை (செப்டம்பர் 21, 2018) திரண்டு சென்று மண் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். 

 

8way

 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் மண் பரிசோதனை பணிகளை நிறுத்தி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எருமாபாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் மண் பரிசோதனை பணிகள் தொடர்ந்து நடந்தது.

 


இதுகுறித்து விவசாயிகள் மோகனசுந்தரம், மலர்க்கொடி, கந்தசாமி ஆகியோர் கூறுகையில், ''சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 14ம் தேதி பிறப்பித்த உத்தரவில், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் இரண்டு வார காலத்திற்கு எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. அதையும் மீறி அதிகாரிகள் சாலைப் பணிக்காக மண் பரிசோதனையில் ரகசியமாக ஈடுபடுகின்றனர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகாதா?

 


எட்டு வழிச்சாலையால் பயண நேரம் குறையும் மற்றும் 700 கோடி ரூபாய்க்கு எரிபொருள் மிச்சமாகும் என்று முதல்வவ் சொல்கிறார். ஆனால், இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் சுமார் 8000 ஏக்கர் விவசாய நிலங்களில் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

 

8way

 

 

8way

 

எட்டு வழிச்சாலை விளை நிலத்தையும் விவசாயிகளை மட்டும் பாதிக்கவில்லை. ஊரையும், மக்களையும் பிளவு படுத்தும். எட்டு வழிச்சாலையில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல பல கிலோமீட்டர் தூரம் கடந்துதான் மறு சாலைக்கு வர முடியும் எனும்போது எரிபொருள் செலவு விரயம் ஆகுமே தவிர மீதமாகாது.


மலைகளைக் குடைந்து சுரங்கப்பாதைகளை அமைப்பதால் சேலத்தில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயமும் உள்ளது. மலை வளமும், வன வளத்தையும் அழித்து தனியார் லாபம் அடைவதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது. நீதிமன்றம் இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வரை எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எந்தப் பணிகளையும் அரசாங்கம் மேற்கொள்ளக்கூடாது,'' என்றனர்.
 

சார்ந்த செய்திகள்