
காவிரி நீர்ப் பிரச்சினையில், தமிழ்நாட்டுக்கு மத்திய பி.ஜே.பி. அரசின் துரோகம் தொடர்கிறது; ஒன்பது முக்கிய கட்சிகளும் மீண்டும் கூடி அடுத்தகட்ட தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி ஆட்சி தமிழ்நாட்டைத் தண்டிப்பதிலும், விவசாயிகளின் உரிமைகளைப் பறிப்பதிலும், தமிழக மக்களின் வாழ்க்கையினை நசுக்குவதிலும் மிகவும் வெளிப்படையாக துணிந்து செயல்பட்டு வருகிறது என்பதற்குப் பச்சையான ஆதாரம்தான், உச்சநீதிமன்றத்தில் காவிரி வரைவுத் திட்டம் அறிக்கை சமர்ப்பிக்க மேலும் இரண்டு வார காலம் தேவை என்று கோரும் மத்திய பி.ஜே.பி. அரசின் மனுவாகும்.
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு இழைத்துவரும் துரோகம் தொடர்கிறது என்பதும் வெளிப்படையாகவே விளங்கி விட்டது.
அரசியல் தேர்தல் இலாபம்தான் மத்திய பி.ஜே.பி. அரசுக்கு முக்கியமே தவிர, தமிழ்நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கையல்ல.
தமிழ்நாட்டு மக்களின் நியாய உணர்வுகளுக்கு மத்திய அரசு சவால் விடும் நிலைதான் தொடர்கிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ்நாடு அரசும், மத்திய அரசின் எந்த முடிவுக்கும் துணை போகும் நிலையில் இருப்பது, மத்திய பி.ஜே.பி. அரசுக்கு வசதியாகப் போய்விட்டது.
இந்த நிலையில், ஒன்பது முக்கிய கட்சிகளும் மீண்டும் கூடி, அடுத்த கட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.