பாராளுமன்றத் தேர்தல் வரை இருப்பதையொட்டி தமிழகத்தில் முதன்முதலில் ஆளும்கட்சியான அதிமுகதான் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுபவர்கள் விருப்பமனு கொடுக்கலாம் என அதிரடியாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி முதல் வருகிற 10ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் ஒரு தொகுதி பாண்டிச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் போட்டி போட விருப்பமுள்ள அதிமுகவினர் தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம் என அறிவித்திருந்தது.
அது தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். அதுபோல் துணைமுதல்வர் ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனி பாராளுமன்ற தொகுதிக்கு மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட துணைச் செயலாளர் முறுக்கோடை ராமர் உள்பட மாவட்ட பொறுப்பாளர்கள் பணம் கட்டி இருக்கிறார்கள். இதில் முக்கிய விஐபியான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தும் சீட்டு கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதுபோல் தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் போட்டி போட வேண்டும் என ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்களான அரண்மனை புதூர்சுப்பு.முன்னாள் எம்.எல்.ஏ, ஆர்.டி.கணேசன், நாகலாபுரம் முருகேசன், பி.சி.பட்டி தீபன் சக்கரவர்த்தி, மதுரை ராஜ்மோகன் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தும் இருக்கிறார்கள். அதுபோல் தங்களுக்கும் சீட்டு கேட்டு பணம் கட்டி இருக்கிறார்கள்.
இது சம்பந்தமாக தேனி மாவட்டத்திலுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது..... கடந்த பாராளுமன்ற தேர்தலின் போதே அண்ணன் ஒ பி.எஸ் அம்மாவிடம் மகன் ரவீந்திரநாத்துக்கு சீட் கேட்டார். ஆனால் அம்மா அப்பொழுது கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக அண்ணனின் தீவிர ஆதரவாளரான பார்த்திபனுக்கு சீட் கொடுத்து வெற்றி பெறவைத்தார்.
அதனால் இந்த முறை பார்த்திபன் தேர்தலில் போட்டி போட விருப்பமில்லை என பேச்சு அடிபட்டு வருகிறது. எனவே தான் ரவீந்திரநாத்துக்கு சீட் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி விருப்ப மனு கட்டியிருக்கிறோம். கடந்த ஒரு வருடங்களாகவே ரவீந்திரநாத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததின் பேரிலதான் கடந்த ஏழு மாதத்துக்கு முன்பு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பதவியை ரவீந்திர நாத்துக்கு வழங்கினார்கள். அதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அண்ணன் ஓபிஎஸ்சுடன் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கட்சிப் பணி ஆற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வருவதால்தான் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டி போட விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். அதனால் தான் நாங்களும் ரவீந்திரநாத் சீட் கொடுக்க வேண்டும் என இருபதுக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறோம். தற்போது அண்ணன் ஒபிஎஸ்சுடன் தான் தொடர்ந்து அரசியலில் இருந்து வருகிறார். அதன் மூலம் வரும் பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்துக்கு அவசியம் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறோம் என்று கூறினார்கள்.
ஆக பாராளுமன்றம் தேர்தல் வருவதற்குள் தமிழகத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி தான் அரசியல் களத்தில் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது.