தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகமானால் அவற்றைப் பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அப்பகுதியிலேயே விடுவதுதான் இதுவரை வழக்கமாக இருந்து வந்தது. அதுவே விதியும் கூட. ஆனால் தெருக்களில் உள்ள நாய்களைப் பிடித்து அடித்தே கொன்று புதைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விருதுநகர் சங்கரலிங்கபுரம் பகுதியில் அதிகளவில் தெரு நாய்கள் கொல்லப்படுவதாக புளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த சுனிதா என்பவருக்கு தகவல் கிடைத்தது. நாய்களை சிலர் பிடித்துக் கொல்லும் வீடியோ பதிவுகளும் பரவியதை அடுத்து ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் சுனிதா. புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர்.
விசாரணையில் சங்கரலிங்கபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது கணவர் இணைந்து ஆட்களை வைத்து நாய்களைக் கொன்றது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் நாய் ஒன்றுக்கு 200 முதல் 300 வரை பேரம் பேசப்பட்டதும் நாய்களை சுருக்கு மாட்டியும் தலையில் அடித்தும் கொன்றதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதுவரை கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட நாய்களை ஊராட்சி மன்றத் தலைவர் நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் ஆட்களை வைத்துக் கொன்றுள்ளனர். கொன்ற நாய்களை ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் புதைத்ததும் தெரிய வந்தது. புதைக்கப்பட்ட இடத்தை தெரிந்துகொண்ட காவல்துறையினர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து புதைக்கப்பட்ட நாய்களைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்து மீண்டும் புதைத்தனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் ஊராட்சி மன்றத் தலைவர் நாகலட்சுமி மீதும் அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் மீதும் வழக்குப் பதிவு செய்து இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.