விருதுநகர் மாவட்டம் - காரியாபட்டி தாலுகா – கிழவனேரி கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திக் (வயது 31) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இளம்வயதில், அதுவும் பொறியாளரான கார்த்திக், ஊராட்சி மன்றத் தலைவரானார். அவருடைய மரணம் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகின்றன. திருமணமான கார்த்திக், மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தும், காரியாபட்டி அருகே வசிக்கும் சேர்ந்த 29 வயது ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் பழகி வந்துள்ளார். ரம்யாவுக்கும் திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். கார்த்திக்கின் திருமணத்தை மீறிய உறவை அறிந்த அவரது மனைவி கோபித்துக்கொண்டு பிரிந்து விட்டார்.
இந்நிலையில், ரம்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அது தனக்குப் பிறந்த குழந்தை என்பதில் உறுதியாக இருந்த கார்த்திக், தன்னோடு குடும்பம் நடத்துவதற்கு ரம்யாவை கிழவனேரிக்கு வரச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், கணவர் மற்றும் குழந்தைகளோடு வாழ்க்கை நடத்தும் ரம்யா, கார்த்திக்கின் அழைப்பை ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து, இருவருக்குமிடையே சண்டை நடந்திருக்கிறது. பொதுவாகவே, ரம்யாவின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் தகராறு நடக்குமாம். அதேரீதியில்தான் அன்றும் ‘நான் சாகப்போகிறேன்..’ என்று மிரட்டலாகச் சொல்லி அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டாராம் கார்த்திக். வெகுநேரமாகியும் கதவைத் திறக்காததால், அவசர போலீஸுக்கும், கார்த்திக்கின் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார் ரம்யா. நண்பர்கள் வந்து கதவை உடைத்துச் சென்று பார்த்தபோது, சேலையால் தூக்கிட்டு கார்த்திக் தற்கொலை செய்து உயிரை விட்டுள்ளார். காரியாபட்டி அரசு மருத்துவமனையும் கார்த்திக் ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்திருக்கிறது.
கார்த்திக் மரணம் குறித்து கேள்விப்பட்ட கிழவனேரி கிராமத்து மக்களும் உறவினர்களும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். கார்த்திக் உடலை உடற்கூராய்வுக்காக எடுத்துச்செல்ல முற்பட்டபோது, கார்த்திக் இறப்புக்கு காரணமானவரை கைது செய்யக்கோரி, காரியாபட்டி – கள்ளிக்குடி சாலையில் மறியல் செய்தனர். காரியாபட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். அதன்பிறகே, கார்த்திக் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள காரியாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யாவும் காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ரம்யாவிடமே கார்த்திக் கொடுத்து வந்ததாகவும், சண்டை நடந்த போது கார்த்திக் வைத்திருந்த சில லட்சங்கள் மாயமானதாகவும், கார்த்திக் உடலில் காணப்பட்ட ரத்தக்காயங்கள் எவ்வாறு ஏற்பட்டது எனவும், பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.