
இலங்கையில் பொதுமக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அங்கு இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகிறது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகக் கோரி பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரி பொருட்களை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களை அனுப்பி வருகிறது. இந்த நிலையில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (30/04/2022) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு சென்றுள்ளார்.
இலங்கையில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள அண்ணாமலை, இலங்கைக்கான இந்தியத் தூதரைச் சந்திக்க உள்ளார். அதைத் தொடர்ந்து, நாளை (01/05/2022) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இந்த கூட்டம் கொட்டக்கலை சி.எல்.எப் வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதைத் தொடர்ந்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலையகப் பகுதிகளுக்கு செல்லும் அண்ணாமலை, அங்குள்ள தேயிலைத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறார். பின்னர், இலங்கையில் மற்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களையும் சந்தித்துப் பேசவிருக்கிறார். அப்போது, பொருளாதார நெருக்கடியால் தமிழர்கள் சந்தித்திருக்கக் கூடிய பிரச்சனைகளைக் கேட்டறியும் அண்ணாமலை, இந்தியா திரும்பியதும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, இலங்கையில் நிலவும் சூழல் குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.