விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் உடல்நலக் குறைவால் இன்று (15/05/2021) காலை காலமானார். அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முகமது யூசுப் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும். மனிதக் குலத்தையே அழித்தொழிக்கும் கரோனாவின் கொலைவெறித் தாகம் எப்போது தணியும்?" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். இனிமையாகப் பழகி, எல்லோரிடமும் நட்பு பாராட்டக்கூடிய யூசுபின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், விசிக தலைவர் அன்பு சகோதரர் தொல். திருமாவளவனுக்கும், அக்கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முகமது யூசுப் கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு, விடுதலைக் கட்சித் தலைவர் திருமாவளனுக்கும், அந்த இயக்கத்தின் மற்ற தோழர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தகவலறிந்ததும் தொல். திருமாவளவனை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு ஆறுதல் கூறினேன்.
முகமது யூசுப் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், விசிக தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.