தமிழகத்தில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பிறகு முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "தி.மு.க. தலைவர் பி.சி.ஆர். கிட்டுகள் தொடர்பாக கூறிய செய்திகளை மறுத்து முதல்வர், தமிழகத்தில் 2 லட்சத்து 71 ஆயிரம் பி.சி.ஆர். கிட்டுகள் 43 கரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி சார்பாக ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட முகக் கவசங்களை வாங்கி மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து வருவதாகவும்" தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் வெண்டிலேட்டர் குறைவாக இருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொல்வது தவறான தகவல். தமிழகம் முழுவதும் 3,371 வெண்டிலேட்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றது. தமிழகத்தில் வெண்டேலட்டர் பயன்படுத்தும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கின்றது. எனவே எதிர்க்கட்சிக் தலைவர் தவறான தகவல்களை அளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகிறார்கள். தவறான செய்திகளைக் கூறி அவர்களின் சேவையை எதிர்க்கட்சித் தலைவர் கொச்சைப்படுத்த வேண்டாம்" என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொண்டுள்ளார்.