திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற 27 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மலை மீது நடைபெறும் குடமுழுக்கு விழாவில் 6,000 பக்தர்கள் கலந்துகொள்ள கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இணைய வழியாக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். இதில் முதற்கட்டமாக 2,000 பேருக்கு அனுமதிக்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. வரும் 25 ஆம் தேதிக்குள் குறுஞ்செய்தி பெறப்பட்டவர்கள் பழனி மலை அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் குறுஞ்செய்தியை காண்பித்து அனுமதி அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கை முன்னிட்டு பழனி கோவில் மற்றும் அடிவாரம் பகுதிகள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குடமுழுக்கு நடைபெறும் நாளான ஜனவரி 27 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த நாளை ஈடுசெய்யும் வகையில் பிப். 25 ஆம் தேதி பணிநாளாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.