கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளின் விளை பொருட்களைக் கொள்முதல் செய்துகொண்டு 13 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணம் தராமல் ஏமாற்றி வந்த இரு வியாபாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
சங்கராபுரம் மார்க்கெட் கமிட்டியில் சங்கராபுரம் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைய வைக்கப்படும் தானியங்களைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். மார்க்கெட் கமிட்டியில் உள்ள அலுவலர்கள் மூலம் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வியாபாரிகள் கொள்முதல் செய்து பொருட்களைக் கொண்டு செல்வது வழக்கம். அதன்படி கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வியாபாரிகள் ராஜா, அசோக் ஆகியோர் கடந்த மே மாதம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கான தொகை 13 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயைத் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணத்தை வசூலித்து தரவேண்டிய மார்க்கெட் கமிட்டி கண்காணிப்பாளர் பிரபு சங்கராபுரம் போலீசில் கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார். அதன் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரிகள் ராஜா, அசோக் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு விவசாயம் செய்துகொண்டு வரும் விளை பொருட்களை மார்க்கெட் கமிட்டி மூலம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மாதக்கணக்கில் பணம் தராமல் இழுத்தடிப்பது நடந்து வருகிறது. தங்கள் கொடுத்த பொருளுக்கு பணம் கேட்டு விவசாயிகள் மார்க்கெட் கமிட்டிக்கு நடையாய் நடக்கும் சம்பவங்கள் சங்கராபுரத்தில் மட்டுமல்ல உளுந்தூர்பேட்டை, செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனம் போன்ற ஊர்களில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளிலும் இதேபோன்ற நிலை தொடர்வதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அரசு இதைக் கவனத்தில் கொண்டு விவசாயிகள் கொடுக்கும் விளை பொருட்களுக்கான பணத்தை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.