மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்திலுள்ள ஆழ்குழாய் கிணற்றுக்குள் சுஜித் வில்சன் என்ற 2 வயது சிறுவன் விழுந்துவிட்டான் என்ற தகவல்கள் பரவியபோது ஒட்டுமொத்த தமிழக மக்களும் தீபாவளிக்காக பொருள் வாங்குவதை மறந்து தொலைக்காட்சிகள் முன்பு அமர்ந்துவிட்டனர். பலர் நேரில் காண புறப்பட்டுவிட்டனர். இளைஞர்கள் பலர் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்று தாங்கள் உருவாக்கிய கருவிகளுடன் பயணித்தனர். மீட்புப் பணியில் தாமதம் என்ற செய்தி அறிந்து பலர் அவசரமாக கருவிகளை உருவாக்கிக் கொண்டு கிளம்பினார்கள். பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் தங்களின் விருப்ப கடவுள்களிடம் வேண்டுதல்களை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகளை பார்த்து கண்களை துடைத்துக் கொண்டனர். எப்படியும் குழந்தை சுஜித் தீபாவளி கொண்டாட வருவான். யாராவது அவனை மீட்டு வருவார்கள் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது. மத்திய, மாநில மீட்புக்குழுக்கள், என்எல்சி, ஒஎன்ஜிசி, என்று பல அரசு தரப்பு வல்லுநர்கள் வந்துவிட்டார்கள் மீட்கப்படுவான் சுஜித் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அனைவரின் நம்பிக்கையும் அந்த ஆழ்குழாய் கிணற்றுக்குள்ளேயே போட்டு புதைக்கப்பட்டுவிட்டது.
இது பற்றி விசாரித்த போது, சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த தகவல் அறிந்ததும் தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் நடுக்காட்டுபட்டிக்கு சென்றனர். இவர்களை தொடர்ந்து இந்திய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் நவீன கருவிகளுடன் நடுக்காட்டுபட்டிக்கு வந்தனர். பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சம்பவ இடத்துக்கு வந்தார். வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் இரண்டு நாள் முகாமிட்டார். இப்படி அமைச்சர்கள், அதிகாரிகள் குழு அங்கே முகாமிட்டு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
மேலும் மீட்பு பணியில் யார் வேலை செய்கிறார்கள் அந்த குழு பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. குழுவின் தலைவரோ அல்லது உயர் அதிகாரியோ, போலீஸ் அல்லது தீயணைப்பு துறை அதிகாரிகளோ சிறுவனை மீட்க எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போகிறோம் என்பது பற்றி ஒருநாள் கூட தொலைக்காட்சியிலோ, பத்திரிகையாளர்களிடமோ தகவல்களை தெரிவிக்கவில்லை. அனைத்து தகவல்களையும் அமைச்சர்களே பத்திரிகையாளர்களுக்கு செய்தியாக கொடுத்து வந்தனர்.
பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் காவல் துறை, தீயணைப்பு துறை வீரர்கள் நடுக்காட்டுபட்டியில் மீட்பு பணியில் இருந்த போது அமமைச்சர்களின் தலையீடு அதிகமாக இருந்ததால் யார் உத்தரவு படி வேலை பார்ப்பது என்று மீட்பு குழுவினர் பெரிய குழப்பத்தில் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்த உடனேயே பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்திருந்தால் கண்டிப்பாக சிறுவனை உயிரோடு மீட்டிருக்க முடியும். ஆனால், முதல்கட்டமாக அங்கு வந்த அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்த ஆலோசனைபடி குழந்தையை மீட்க முயற்சி எடுத்தனர். அது தோல்வியில் முடிந்தது என்று கூறுகின்றனர். அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் முரண்பட்ட உத்தரவுகளால் எங்களால் சுயமாக பணியாற்ற முடியவில்லை என்றும் குமுறுகின்றனர்.
முகத்தைக்கூட பெற்றோருக்கு காட்டவில்லை: கடந்த 25ம் தேதி மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுஜித், 4 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சடலமாக மீட்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. உண்மையில், ஆழ்துளை குழாயில் சிக்கிய சிறுவனை எப்படி வெளியே கொண்டு வந்தனர் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதோடு சிறுவனின் முகத்தைக் கூட பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ காட்டவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக பொதுமக்கள் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளனர்.