Skip to main content

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தை உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்!- உயர்நீதிமன்றம் தீர்ப்பு! 

Published on 24/12/2020 | Edited on 24/12/2020

 

Pachaiyappa's Trust board chennai high court order

பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தை, உயர்நீதிமன்ற சொத்தாட்சியர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக, எல்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், அறக்கட்டளையின் அறங்காவலர் தேர்தல் நடத்த தடை கேட்டும் வழக்குகள் தொடரப்பட்டன.

 

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், ‘பச்சையப்பன் அறக்கட்டளையின் மாற்றம் செய்யப்பட்ட விதி அடிப்படையில், அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக, தற்போதைய அறக்கட்டளை நிர்வாகியாக உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகத்தை அறக்கட்டளைத் தலைவராக இந்த நீதிமன்றம் நியமிக்கிறது. அவர், அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை 6 மாதங்களுக்குள் நடத்த வேண்டும்.

 

பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான அண்ணா அரங்கம், ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து, குத்தகை எடுத்த நிறுவனம் அரங்கங்களை 10 நாட்களுக்குள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்’எனத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, பச்சையப்பன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் அறக்கட்டளைய நிர்வகிக்க குழு அமைக்கப்பட்டது முறையானது அல்ல, குத்தகை காலம் முடியும் வரை அரங்கங்களைப் பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தனர். 

 

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, ‘மீண்டும் இந்த வழக்கை அனைத்து அம்சங்களோடு தனி நீதிபதி விசாரிக்க வேண்டும், தனி நீதிபதி யார் என்பதை புதிய தலைமை நீதிபதி முடிவு செய்வார். அறக்கட்டளை நிர்வாகத்தை நிர்வகித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் விலகுவதாக தெரிவித்துள்ளதால், அறக்கட்டளை நிர்வாகத்தை உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்றும் தீர்ப்பளித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்