சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் திடீரென கல்லூரி வளாகத்தின் முன்புறத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்கவும், கழிவறைக்கு செல்லும் மாணவர்களை மிரட்டி கல்லூரி நிர்வாகம் மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி முழுவதும் பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிவறை வசதி உருவாக்க வேண்டும்; கல்லூரியில் அடிப்படை வசதிகளை சரி செய்ய வேண்டும்; சேதமடைந்த கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும்; விடுதியில் பாதுகாப்பான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; சத்தான உணவுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி வளாகத்தின் ஜனநாயகத்தை பறிக்கும் வகையில் கல்லூரி நிர்வாகம் செயல்படுகிறது என நூற்றுக்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தின் உள்பகுதியிலும் கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயில் பகுதியிலும் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.