தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முழு ஊரடங்கை கடுமையாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு ஆகியவை தொடர்ந்து அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு பணிகள், ஆக்சிஜன் விநியோகம், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதி உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார்.
இந்த நிலையில், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் திட்டத்தில் தமிழகத்துக்காக மேலும் 27.6 டன் ஆக்சிஜன் ரயிலில் கொண்டு வரப்பட்டது. ஒடிசாவில் இருந்து தலா 13.8 டன் ஆக்சிஜன் நிரப்பிய இரண்டு லாரிகள் ரயிலில் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்தன.
அதைத் தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஒரு லாரியும், மதுரைக்கு ஒரு லாரியும் அனுப்பப்படுகிறது.
ஏற்கனவே, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜன் வந்த நிலையில், ஒடிசாவில் இருந்து 27.6 டன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.