கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் கேரளாவைச் சேர்ந்த ரபிக் என்பவர் 3 பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். அவற்றில் ஒன்று ஆவினங்குடி பேருந்து நிலையத்திலும் இரண்டு திட்டக்குடியிலும் இயங்கி வருகிறது. திட்டக்குடியில் கிருஷ்ணா தியேட்டர் அருகே இயங்கி வரும் பேக்கரியில் திட்டக்குடியை சேர்ந்த கொளஞ்சி என்பவர் தின்பண்டங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மனித பல் துண்டுகள் கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த கொளஞ்சி என்பவர் கடை உரிமையாளரிடம் பல் துண்டுகளைக் காண்பித்துள்ளார்.
அப்போது ‘அப்படிதான் இருக்கும் சாப்பிட்டால் சாப்பிடு இல்ல வெளியே சென்று விடு’ என்று உரிமையாளர் தரக்குறைவாகப் பேசியுள்ளார். எங்கு வேண்டுமானாலும் போய் சொல் என்னிடம் அட்வகேட் உள்ளனர் என மிரட்டியும் உள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் கூட்டமாக கூடினர். அதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சுற்றியிருந்த பொதுமக்கள் கூறுகையில், “சுத்தமில்லாமல் செய்யும் தின்பண்டங்களைச் சாப்பிட்டால் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அதனால் உடனே தமிழக உணவு பாதுகாப்புத் துறை, கடலூர் மாவட்ட அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தகுந்த அதிகாரிகள் கடையை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கடை உரிமையாளர் ரபிக் மீது நடவடிக்கை எடுக்கும்படி” கோரிக்கை விடுத்துள்ளனர்.