காஞ்சிபுரம் வானவில் நகர்ப் பகுதியில் வசித்த ஒரு குடும்பத்தினர் வீட்டு வாடகையை முறையாகச் செலுத்தாத நிலையில், வீட்டு உரிமையாளர் மாடிப்படிகளை இடித்ததால், அவர்கள் பல மணி நேரம் வீட்டில் முடங்க நேரிட்டது. இதனைத்தொடர்ந்து, அந்தக் குடும்பம் அவசர எண் 100இல் புகார் தெரிவித்ததும், தீயணைப்புத்துறையினரும் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினரும் இணைந்து அவர்களை மீட்டனர்.
காஞ்சிபுரம் விளக்கடிகோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ஆப்செட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள வானவில் நகர்ப் பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. இங்கு மேல் மாடியில் வேணுகோபால் என்பவர், தனது மனைவி லீலா, தம்பி பாபு, மகள் மகாலட்சுமி மற்றும் அவருடைய இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வேணுகோபாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, அந்த வீட்டிலேயே இருந்து வருகிறார்.
இந்நிலையில் பாபு முறையாக வாடகை செலுத்தாததால், அவரை குடியிருப்பில் இருந்து காலி செய்யும்படி வீட்டு உரிமையாளர் சீனிவாசன் கூறியிருக்கிறார். அதனால் பாபு, வழக்கறிஞர் உதவியுடன் வீட்டு உரிமையாளரிடம் பேசி, கால அவகாசம் கேட்டு, கடந்த ஆறு மாத காலமாக வாடகையைச் செலுத்தாமல் இருந்திருக்கிறார். பலமுறை கூறியும், வீட்டைக் காலி செய்ய பாபு மறுத்த நிலையில், கட்டுமானப் பணியாளர்கள் 10 பேருடன் அங்கு வந்த சீனிவாசன், தனது வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை இடித்து, அந்தக் குடும்பத்தினர் வெளியேற முடியாதவாறு இணைப்பைத் துண்டித்திருக்கிறார்.
நடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்தக் குடியிருப்புவாசிகள், அவசர உதவி எண் 100க்கு அழைத்து புகார் தெரிவித்தனர். அந்தப் புகாரின் பேரில், காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு, அந்த வீட்டில் இருந்தவர்களை, காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து மீட்டுள்ளனர்.