தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார்.
நடிகர் விஜயின் கொள்கைகள் குறித்த கருத்துக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் விஜய்யின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''எங்களை பற்றி விஜய் எந்த ஒரு விமர்சனமும் பண்ணவில்லை. நாங்களும் அவரைப் பற்றி எதுவும் பேசவில்லை. அவர் பேசியதற்கு சீமான் பதில் சொல்லி இருக்கிறார். இதில் எங்களுடைய பார்ட் ஒன்றும் கிடையாது.
'அதிமுகவை விமர்சனம் பண்ணாததால் நடிகர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்க இருப்பதாக சொல்கிறார்களே' என்ற கேள்விக்கு, ''இதை நீங்கள் விஜய் இடம்தான் கேட்க வேண்டும். இதில் எங்களுக்கு ஒன்றும் இல்லை. சீமான் சொன்னதுக்கு விஜய் பதில் சொல்லிவிட்டார். பொறுமையாக, தெளிவாக பதில்சொல்ல வேண்டும் என தொண்டர்களுக்கு விஜய் சொல்லிவிட்டார். 2026-ல் அதிமுக ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வருவார். இது எங்களுடைய கட்சிக் கொள்கை. கூட்டணி பற்றிய முடிவுகளை எங்களுடைய பொதுச்செயலாளர் படிப்பு பழனிசாமிதான் அறிவிக்க முடியும். அவர்தான் அதற்கு பொறுப்பானவர்'' என்றார்.
Published on 04/11/2024 | Edited on 04/11/2024