கரோனா வைரஸ் தொடர்பாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து, வருமானம் இல்லாமல் தவித்தனர். ரயில், பேருந்து, விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால் தங்களது சொந்த மாநிலங்களுக்குப் போக முடியாமலும், தங்குமிடம் உணவு போன்றவற்றிக்கும் கடும் சிரமப்பட்டனர்.
இதையடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது, உரிய மருத்துவப் பரிசோதனை நடத்தி பாஸ் கொடுக்கப்பட்டு தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் இருந்து இதுவரை 193 ஷர்மிக் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் மூலம் இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 850 வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.