
மதுரையில் தண்டாயுதபாணி கோயிலில் அர்ச்சகர்களின் தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என அறநிலையத்துறை செயல் அலுவலர் கடந்த 7 ஆம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், “மதுரை நேதாஜி ரோட்டில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவர்களாகவே விரும்பி அர்ச்சகர்கள் தட்டில் போடும் காணிக்கைகளை கோயில் உண்டியலில் செலுத்துமாறு அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அர்ச்சகர்களின் தட்டுகளில் போடப்படும் காணிக்கைகள் உண்டியலில் போடும் பணி கோயில் மணியம் மற்றும் காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தட்டு காணிக்கைகளை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு அர்ச்சகர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த நிலையில் தண்டாயுதபாணி கோயிலில் தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்படுவதாக இந்து சமயஅறநிலையத் துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் கோயில் நிர்வாகத்தினர் அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர் என்றும், இதுகுறித்து கோயில் செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.